ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரைச் சேர்ந்த சத்யநாராயண் பலிவால் (42) என்பவர் பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செயல்பட்டுவருவதாகக் காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படை (ஏடிஎஸ்), சிஐடி ஆகியவற்றிற்குத் தகவல் வந்தது.
இது குறித்து விசாரித்த காவல் துறையினர், இந்திய ராணுவம் பற்றிய முக்கியத் தகவல்களை சத்யநாராயண் பாகிஸ்தானுக்கு விற்று பணம் சம்பாதித்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றப் புலனாய்வுத் துறை சிறப்புப் பிரிவு சத்யநாராயணை கைதுசெய்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு இருப்பதும், இந்திய ராணுவம் பற்றிய முக்கியத் தகவல்கள் வைத்திருப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகச் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த குல்ஜீத் குமார் என்ற நபரைக் கைதுசெய்யப்பட்டார். இவர் சம்பாவில் உள்ள முக்கியமான இடங்களைப் புகைப்படம் எடுத்து அவற்றைப் பாகிஸ்தானுக்கு விற்று அதிக சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.