கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பை, புனே, இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தில் சில பகுதிகளில் விதிகள் மீறப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது. இதனால், வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சகம் கவலை தெரிவித்தது.
எனவே, சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவரவும் விதிகள் பின்பற்றுவதை கண்காணிக்கவும் அமைச்சரவைக்கு இடையேயான மத்திய குழு அனுப்பப்பட்டது. கரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் விதமாக மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநில அரசுகளுக்கு இக்குழு ஆலோசனை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கொல்கத்தா, ஜபல்பூர் ஆகிய இடங்களுக்கு நேற்று இக்குழு சென்று நிலைமையை ஆராய்ந்தது. மேற்குவங்கத்திற்கு இக்குழு சென்ற பிறகே மாநில அரசுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கடிதத்தில், "காலையிலேயே மத்திய குழு மேற்குவங்கத்திற்கு வந்துவிட்டது. ஆனால், இதுகுறித்து மாலைதான் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல அக்குழு எல்லை பாதுகாப்பு படையின் உதவியை நாடியுள்ளது. மேற்கு வங்க அரசிடம் இதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை நீங்கள் ஏற்று கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புனேவில் 25 மருத்துவ பணியாளர்களுக்கு கரோனா!