கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை சரிசெய்வதற்காக மத்திய அரசு சார்பாக ரூ.20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை அறிவித்தார்.
இந்த அறிவிப்பு பற்றி மம்தா பானர்ஜி பேசுகையில், ''மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார தொகுப்புத் திட்டம், ஒரு கண்துடைப்பு நாடகம். நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், மக்களுக்கான நிவாரணத்திற்கும், புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காகவும் எவ்வித நிதியும் அளிக்கப்படவில்லை. இதுமிகப்பெரிய ஏமாற்றம்'' என விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், ''கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரூ.10 லட்சம் கோடி பொருளாதார தொகுப்புத் திட்டம் கோரியிருந்தார். ஆனால், மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி அறிவித்துள்ளது. மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் இடைத்தரகர்களுக்கு வேலையின்றி பாஜக அரசு திட்டங்களை அறிவித்துள்ளது.
இதனை ஏற்க முடியாமல் மம்தா பானர்ஜி விமர்சித்து வருகிறார். இடம்பெயர் தொழிலாளர்களுக்காக 15 விழுக்காடு ரயில் கட்டணத்தை ஏற்க முடியாது எனக் கூறி, தொழிலாளர்களைக் கட்டணம் செலுத்த வைத்தது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து வருகிறது, மம்தாவின் அரசு'' என்றார்.
இதையும் படிங்க: 'மீதமுள்ள 16.4 லட்சம் கோடி எங்கே?' - ப.சி. கேள்வி! சிதம்பர ரகசியத்தை இன்று உடைக்குமா அரசு?