உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் கடந்த 30 நாட்களாக இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில், இதன் பரவல் இரண்டாம் கட்ட நிலையை எட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை பெருந்தொற்றால் 231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என மேற்கு வங்க மக்கள் நல வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்துத் துறைகளும் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், மேற்கு வங்கம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்கள், கரோனா பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று நோய் அறிகுறி தென்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றன.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, தமது உயிரையும் பொருட்படுத்தாது தந்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வரும் நதியா மாவட்டத்தின் ரணகாட் பகுதியைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், தனது வீட்டிற்குச் சென்றபோது, அண்டை வீட்டினர் அவரை தடுத்து நிறுத்தி, நோய்த்தொற்று பரவும் என சொல்லி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்த செய்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து விசாரித்த அவர் இந்தச் செயலால் பாதிக்கப்பட்ட செவிலியருக்கு அரசு குடியிருப்பு ஒன்றில் தங்குவதற்கு இடத்தை ஒதுக்கி ஆணை வெளியிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ உலகமே பெரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் இப்போதும், மக்கள் எப்படி இத்தகைய மனநிலையை கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை? மக்களுக்காக உழைத்துவரும் செவிலியர் ஒருவரை, அவரது சொந்த வீட்டில் கூட தங்க வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவருடைய மனம் அங்கே தான் இருக்கிறது.
குடும்பத்தோடு அவர் தங்குவதற்கு அனுமதி மறுக்க மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதுபோன்ற செயல்களைச் செய்கிறவர்களிடம் நான் கேட்கிறேன், உங்கள் வீட்டில் யாராவது கரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களிடமும் நீங்கள் இவ்வாறே நடந்து கொள்வீர்களா?
இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். கோவிட்-19 நோய்த்தொற்றை காரணம்காட்டி, இத்தகைய செயல்களில் ஈடுபடும் மக்களை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க முடியும்” என எச்சரித்தார்.
இதையும் படிங்க : கரோனா ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் சாலையின் நடுவே தரையிறக்கம்