உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நியாயவிலை கடைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம் அக்.15ஆம் தேதியன்று நடைபெற்றது.
மாவட்ட துணை ஆட்சியர் சுரேஷ் பால், முன்னின்று நடத்திய இந்த கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேந்திர சிங்கின் உதவியாளரும், பாஜக பிரமுகருமான திரேந்திர பிரதாப் சிங் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது, நியாய விலைக் கடையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கூட்டத்தினருக்கும், பாஜக பிரமுகருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாஜக பிரமுகர் திரேந்திர பிரதாப் சிங் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து பொது மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டார். அதில் ஜெயபிரகாஷ் பால் காமா என்பவர் சம்பவ இடத்திலேயே துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பாஜக பிரமுகர் திரேந்திர சிங்கை கைது செய்யக்கோரியும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் உள்பட பலரும் கோரிக்கை விடுத்தனர்.
எதிர்ப்புகள் அதிகரித்ததை அடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து, இதுவரை 10 பேரை கைது செய்தனர். மேலும் சுமார் 30 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தலைமறைவான பாஜக பிரமுகர் திரேந்திர பிரதாப் சிங்கை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பாக நேற்றிரவு லக்னோவில் கைது செய்யப்பட்டார்.
இன்று காலை பலத்த பாதுகாப்புடன் பாலியா மாவட்ட நீதிமன்றத்தில் பிரதாப் சிங் நேர் நிறுத்தப்பட்டார்.
இதனையடுத்து, கொலைக் குற்றச்சாட்டப்பட்ட அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.