மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை அடுத்துள்ளது ஜுன்னார் கிராமம். வனப்பகுதிக்கு புகழ்பெற்ற ஜுன்னார் கிராமத்தின் தலேவாடி பகுதியில் லாங்கூர் வகை குரங்குகளின் நடமாட்டம் கூடுதலாக இருக்கும்.
இந்நிலையில், அந்த பகுதியில் லாங்கூர் குரங்கு ஒன்றை சிலர் கொன்று, அதன் கறியை சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இரண்டு நபர்களை கைது செய்தனர்.
இது குறித்து பேசிய வனத்துறை அலுவலர், "ஒரு குரங்கைப் பிடித்து அதன் இறைச்சியை சாப்பிட்ட ஏக்நாத் அஸ்வாலே (29) கணபத் ஹிலாம் (40) ஆகிய இருவரை நாங்கள் கைது செய்துள்ளோம்.
அவர்களிடமிருந்து, கொன்று சமைக்கப்பட்ட லாங்கூர் குரங்கின் எலும்புகள் மற்றும் காய வைக்கப்பட்ட இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த இருவரும் தொடர்ச்சியாக, லாங்கூர் குரங்குகளை வேட்டையாடி கொன்று, அதன் இறைச்சியைத் சாப்பிட்டுவருவதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதிக்கப்படலாம்" என தெரிவித்தார்
1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரையும் வரும் ஜூன் 24ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க புனே நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.