கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தினசரி கூலி தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக பொருளாதாரம் மூடங்கியுள்ளதால் தொழிலாளர்களுக்கு 50 விழுக்காடு ஊதியம் வழங்க அனுமதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கில், தன்னையும் இணைத்துக்கொள்ள கோரி தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு மனு தாக்கல்செய்துள்ளது.
அதில், "50 விழுக்காடு ஊதியம் வழங்குவது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும், ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் தினசரி சம்பாதிக்கும் ஊதியத்தை முழுமையாகச் சார்ந்து இருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கான ஒப்பந்தத்தில், தொழிலாளி வேலை செய்யும்வரை அவர்களுக்கான ஊதியத்தைப் பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஊழியருக்கு நிறுவனம் வேலை வழங்க முடியாவிட்டால், ஊதியம் வழங்கப்படாது என்று குறிப்பிடவில்லை.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தற்போது நிறுவனங்கள் இயங்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் விதிகளின்படி, வேலைசெய்யும் நிறுவனங்களில், தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படாவிட்டாலும், ஒப்பந்தத்தின் மற்ற எல்லா விதிமுறைகளையும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா எதிரொலியால், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளதால், தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் தேவை என்றும், ஊரடங்கின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் தொழிலாளர்களுக்கு உதவ, உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: வருங்கால வைப்பு நிதியைக் கொண்டு தொழிலாளர்களுக்கு ஊதியமா? - மத்திய அரசு விளக்கம்