நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்தனர். முதலில் அவர்களைச் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப அனுமதி தர மறுத்த மத்திய அரசு, பின் அதற்கு அனுமதியளித்தது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சிறப்பு ரயில்களுக்கான கட்டணங்களில் 85 விழுக்காட்டை மத்திய அரசும் 15 விழுக்காட்டை மாநில அரசு ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப ரூ. 54.75 கோடியை மகாராஷ்டிர அரசு செலவழித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து இதற்காக ரூ. 54,75,47,070 ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் ரயில் டிக்கெட்டுகளுக்கான பணம் செலுத்தப்பட்டது. இந்த ரூ.54.75 கோடியில் மும்பை நகருக்கு மட்டும் ரூ.10 கோடியும் மும்பை புறநகர் பகுதிகளுக்கு ரூ.12.96 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக, மகாராஷ்டிராவிலிருந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மகாராஷ்டிராவுக்கு வரும் புலம்பெர்யந்த தொழிலாளர்கள் என இரு தரப்பினரின் டிக்கெட் கட்டணத்தையும் மாநில அரசு ஏற்கும் என்றும் உத்தவ் தாக்கரே அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஒருபோதும் தொழிலாளர் நல சட்டங்களைத் திருத்த மாட்டோம் - மம்தா திட்டவட்டம்