மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தன்னால் ஆட்சியமைக்க இயலாது என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்று ஆளுநரை சந்தித்த சிவசேனா, காங்கிரஸிடம் இருந்து உறுதியான நிலைப்பாடு தெரிவிக்காத நிலையில் ஆளுநரிடம் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது. சிவசேனாவின் கோரிக்கையை மறுத்த ஆளுநர் அடுத்ததாக உள்ள பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
மேலும் ஆட்சியமைப்பது தொடர்பான முடிவை 24 மணிநேரத்திற்குள் தெரிவிக்குமாறு அவகாசம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரைச் சந்தித்தனர்.
சிவசேனாவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டிவருவதால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இழுபறி நீடித்துவருகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் அம்மாநிலத்தில் விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'கனவு நனவானது' - அயோத்தி தீர்ப்பு குறித்து உ.பி முன்னாள் முதலமைச்சர் கருத்து