நீண்ட நாட்களாகக் குழப்பம் நீடித்து வரும் மகாராஷ்டிரா அரசியலில் இன்று தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உள்ள வாய்ப்புகள் குறித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் ஆலோசிக்க உள்ளனர். இதன் மூலம் மகாராஷ்டிரா அரசியலில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குழப்பம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைக்கும் என்றார். ஆனால், அவர் இவ்வாறு கூறிய சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,"சோனியா காந்தி - சரத் பவார் இடையே நடைபெறவிருக்கும் ஆலோசனைக்குப் பின்தான் அரசு அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
அதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதேபோல காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்களும் ஆலோசிக்கவுள்ளதாகவும் அதைத்தொடர்ந்தே ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் கருத்து தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்து. அமையவிருக்கும் ஆட்சி 50-50 என்று இருக்க வேண்டும் என்று சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்காததால், எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யரி விடுத்த அழைப்பை எந்தக் கட்சியும் ஏற்காததால், நவம்பர் 12ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலைக்கு செல்பவர்கள் அர்பன் நக்சல் - சர்ச்சையை கிளப்பும் மத்திய அமைச்சர்