மகாராஷ்டிரா மாநிலம், புல்தானாவில் உள்ள தனாஜி நகரைச் சேர்ந்த பிரதீப் மோர், அஃப்ரோஸ் பாக்பன் ஆகியோர் மூன்று வயதான கன்றுக்குட்டியை தங்கள் பசு தான் ஈன்றது எனக்கூறி உரிமை கோரினர். இவ்விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. இதையடுத்து, இரு தரப்பு வாதத்தை விசாரித்த காவல் ஆய்வாளர், குறிப்பிட்ட அந்த கன்று பிரதீப் மோரை நோக்கி ஓடியதால், அவருக்குச் சொந்தமானது என காவல் துறையினர் எண்ணி கன்றை அவருடன் அனுப்பி வைத்தனர்.
இதற்கு கடுமையான எதிர்ப்பை அஃப்ரோஸ் பாக்பன் பதிவு செய்ததால், உண்மையைக் கண்டறிய காவல் துறையினர் கன்றுக்குட்டிக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுத்திட பரிந்துரைத்தனர். இப்பிரச்னையை அறிவியல் ரீதியாக தீர்க்க காவலர்கள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது
இதுகுறித்து புல்தானாவின் கால்நடை பராமரிப்புத் துறை உதவி ஆணையர் டாக்டர் பி.வி.சலுங்கே கூறுகையில், " டிஎன்ஏ பரிசோதனை சாத்தியமானது தான். ஆனால், அதிக செலவுமிக்கது. தற்போது புல்தானாவில் சோதனை மையம் இல்லாததால், ஹைதராபாத்திற்கு மாதிரிகளை அனுப்பி வைப்போம். டிஎன்ஏ ரிசல்ட் வரும் வரை கன்றை தனி கொட்டகையில் வைத்திட அறிவுறுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.