மகாராஷ்டிராவை அடுத்துள்ள அவுரங்காபாத்தில் உள்ள பாஜக மாநில துணைத் தலைவர் மருத்துவர் பகவத் காரத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தாக்குதல் நடந்தபோது நான் மருத்துவமனையில் அமர்ந்திருந்தேன். அப்போது என் வீடு, கார் மீது கற்கள் வீசப்பட்டன. பின்பு, அதில் சிலர் என்னிடம் வந்து என்னுடைய அறிக்கையைக் குறித்து கேள்விக்கேட்டு என்னை அச்சுறுத்தினர். இது அவர்கள் வீசியக் காகிதங்களில் கூட பதிவாகியுள்ளது.
இந்த கற்களை வீசியது கிஷ்சந்த் தன்வானியின் ஆதரவாளர்கள் தான் என நான் உறுதியாக கூறுவேன். மேலும், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மத்தியிலும் பாஜக வெல்லும் " என்றார்.
இந்த தாக்குதல் குறித்து மருத்துவர் பகவத்காரத் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரணை செய்துவரும் கிராந்தி சவுக் காவல் நிலைய ஆய்வாளர் அமோல் தேவ்கர், இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து எவ்வித கருத்தையும் கூற மறுத்துவிட்டார். நடைபெறவிருக்கும் அவுரங்காபாத் நகராட்சி தேர்தலுக்கும், இந்த தாக்குதலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது.
மருத்துவர் பகவத் காரத், குற்றம்சாட்டியுள்ள கிஷன்சந்த் தன்வானி, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் எழுந்த சலசலப்பை அடுத்து பாஜகவை விட்டு வெளியேறி, ஆளும் சிவசேனாவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: குடியுரிமை விவகாரம்: மகாராஷ்டிர கூட்டணி அரசில் கருத்து மோதல்