பிகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார் யாதவ் தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அம்மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோர், நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த முறை நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மும்முனை போட்டியை காணவுள்ளது. மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான (கிராண்ட் அலையன்ஸ்) பிரமாண்ட கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ (எம்), சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி ஆவாம் மோர்சா ஆகியவை கைகோர்க்கும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும, தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது வரை ஜேடியூ-பாஜக அணியில் ராம்விலாஸ் பாஸ்வானில் லோக் ஜனசக்தி நீடிப்பது மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமையில் ராஷ்டிரிய லோக் சமாஜ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு பக்கம் தனித்து தேர்தலை சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக உபேந்திர குஷ்வாஹாவை பி.எஸ்.பி கட்சியின் தலைவர் மாயாவதி முன்மொழித்துள்ளார்.
இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் மகா கூட்டணி மற்றும் என்.டி.ஏ கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடுகளில் இழுபறி நிலையே நீடித்து வருகின்றன.
இதுவரை இந்த இரு கூட்டணிகளிடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகாத நிலையில் மகா கூட்டணி தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டு, நாளை தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள நிகழ்வில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ஜேடி 145 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், இடதுசாரிகள் 30 இடங்களிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக அறியமுடிகிறது.