மகாராஷ்டிர மாநிலத்தில் சீனாவை சேர்ந்த மூன்று பிரபல நிறுவனங்கள் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருந்தது. இந்நிலையில் சீன நிறுவனங்களுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக பேசிய அம்மாநில தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், “ஆன்லைன் மூலமாக நடைபெற்ற மகாராஷ்டிரா 2.0 முதலீட்டாளர்கள் கூட்டத்தில், சீனா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களுடன் மாநில அரசால் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. .
மாநிலத்தில் பெரும் வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் மகாராஷ்டிரா அரசு, சீனா மட்டுமின்றி, அமெரிக்கா, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு உள்நாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
சீனாவுடனான எல்லைப் பதற்றங்கள் நீடித்ததால் தற்சமயம் சீன நிறுவனங்களுடன் மேற்கொண்ட எந்த ஒரு தொழில்துறை ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட வேண்டாமென்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது
இதையடுத்து, மத்திய அரசுடன் கலந்தாலோசித்த பிறகு மகாராஷ்டிராவில் முதலீடு செய்யவிருந்த மூன்று சீன நிறுவனங்களான ஹெங்லி இன்ஜினியரிங் ( புனேவின் டேல்கானில் 250 கோடி ரூபாய் முதலீடு), பி.எம்.ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி சொலிஷன் ஜே.வி ஃபோட்டான் ( 1,000 கோடி ரூபாய் முதலீடு), கிரேட் வால் மோட்டார்ஸ் ஆட்டோமொபைல் (3,770 கோடி ரூபாய் முதலீடு) ஆகியவற்றுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது” என்றார்.