மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சோனு மகாஜன். கடந்த 2016ஆம் ஆண்டில் எம்.எல்.ஏ.வாக இருந்த பாஜகவைச் சேர்ந்த பாட்டீல் மற்றும் அவரது ஆதரவாளர்களால் சோனு மகாஜன் தாக்கப்பட்டதாக அறியமுடிகிறது. அப்போது, அம்மாநிலத்தை பாஜக ஆட்சி செய்துவந்ததால் பாதிக்கப்பட்ட மகாஜனின் புகாரை காவல்துறையினர் பதிவு செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர், தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவத்திற்கு நீதிக்கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலில் அதனை வழக்காக பதிய வைத்தார். இருப்பினும், அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) 2019ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. நீதி வேண்டி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி குரல் எழுப்பியுள்ளன.
இதையடுத்து, அழுத்தம் அதிகரிக்க இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரிக்க ஜல்கான் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று (செப்டம்பர் 15) உத்தரவிட்டுள்ளார். அண்மையில், மகாராஷ்டிரா முதலமைச்சரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை கேலி செய்யும் கார்ட்டூனை சமூக ஊடகங்களில் பதிவிட்ட மும்பையைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர் மதன் சர்மா (62) மீது சிவ சேனா கட்சியினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் இன்று கைது செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.