கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்தியப் பிரதேசத்தில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த சிவராஜ் சிங் முதலமைச்சராக பதவியேற்றார். இருப்பினும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யாமல் முதலமைச்சர் தொடர்ந்து காலதாமதம் செய்துவந்தார்.
இதனிடையே, கரோனா வைரஸ் நோய் இந்தியாவைத் அச்சுறுத்திவரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் கூட இல்லாமல் மாநிலம் பெரும் பாதிப்படைந்தது. அமைச்சரவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், நரோட்டம் மிஸ்ரா, துளசிராம் சிலாவாத், கோவிந்த் சிங் ராஜ்பூட், மீனா சிங், கமல் படேல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில், துளசிராம் சிலாவாத், கோவிந்த் சிங் ராஜ்பூட் ஆகியோர் சிந்தியா ஆதரவாளர்கள் ஆவர். அடுத்த அமைச்சரவை விரிவாக்கம் மாநிலங்களவை தேர்தல் முடிந்தவுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய பிரதேசத்திற்கு உதவும் பிரம்மோஸ் ஏவுகணை நிறுவனம்