கரோனா நெருக்கடிகள் மத்தியிலும் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டங்கள் ஒன்றுக்கொன்று இடைவெளி கொண்ட மாற்று நாள் கூடுகை என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.
மழைக்கால அமர்வு செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும். மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டங்கள் ஒரு நாள் மக்களவை மற்றும் அடுத்த நாள் மாநிலங்களவை என்ற நடைபெறும்.
மக்களவை நடவடிக்கைகள் மக்களவை மண்டபம், மாநிலங்களவை மண்டபம் மற்றும் மத்திய மண்டபம் என மூன்று இடங்களிலும் தனிநபர் இடைவெளியுடன் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இயங்கும்.
நாடாளுமன்றத்தின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் துப்புரவுப் பணிகள் முழு வீச்சில் நடைபெறும். அனைவருக்கும் தகுந்த மருந்துகள் வழங்கப்படும்.
இரு அவைகளிலும் தகுந்த தனிநபர் இடைவெளியை பின்பற்றி இருக்கைகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உறுப்பினர்களுக்கு அவை அலுவல் தெரியும் வகையில் 4 பெரிய திரைகளும் 6 சிறிய திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இரு அவைகளும் நான்கு மணி நேர இடைவெளியோடு, இரண்டு பொழுதாக தினசரி அடிப்படையில் நடத்தும் திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. முதல் பாதி மக்களவைக்கும், இரண்டாவது பாதி மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கும் ஒழுங்கு செய்துத் தரப்படலாம் என நாடாளுமன்ற உயரலுவலக வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.
இந்த கூட்டத்தொடரில் 11 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.