உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. அதனையடுத்து அலுவலர்கள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தில் நடத்திய சோதனையில், ரூ.4 கோடி ரொக்கம், ரூ.10.69 கோடி மதிப்புள்ள 3.17 லட்சம் லிட்டர் மதுபானம் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர்.
இது குறித்து உத்தரப்பிரதேச மாநில தலைமை தேர்தல் அலுவலர் யூ.பி.எல் வெங்கடேஸ்வர-லு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 787 உரிமம் பெற்ற ஆயுதங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், 183 பேரின் ஆயுத உரிமங்களை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்றுவரை சுமார் 2,610 கிலோ வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறையை மீறிய 86 ஆயிரத்து 597 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆறு லட்சத்து 16 ஆயிரத்து 828 சுவரொட்டிகளும், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 63 பதாகைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளது' என்றார்.
ஏப்ரல் 11, 18, 23, 29- மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.