கார்த்திகை விரதம்
கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டம்தான். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல்சுத்தம், மனசுத்தத்துடன் ஐயப்பனின் அருளை வேண்டி காட்டையும் மலைமேட்டையும் கடந்து சென்று சரணம் அடைவதில் உள்ள சுகத்தை, அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறியமுடியும்.
சுவாமி ஐயப்பன் சிவ-விஷ்ணுவின் குழந்தையாக அவதரித்தவர். ஆகவே அவருக்கு கோபாலனுக்கு உரிய நெய்யையும், சிவனுக்கு உரிய முக்கண் கொண்ட தேங்காயையும் பக்தர்கள் இருமுடிக்கட்டி எடுத்து செல்கின்றனர்.
பேட்டை துள்ளல்
சுவாமி ஐயப்பனின் திருஆபரண பெட்டி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் மட்டும் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். சுவாமி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் அவரின் திருஆபரண பெட்டியையும் தரிசிக்க தவறுவதில்லை.
இந்த திருஆபரணப் பெட்டி மேள-தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படும். மகரஜோதிக்கு முன்னோடியாக, அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நடந்தது. இதையடுத்து சுவாமி ஐயப்பனின் திருஆபரணம், பந்தளத்தில் இருந்து இன்று (ஜன13) புறப்படுகிறது.
கருடன் தரிசனம்
சபரிமலையில் வருகிற 15-ஆம் தேதி மகரஜோதி விழா நடக்கிறது. மகரவிளக்குக்கு இரண்டு நாட்கள் முன் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத் துள்ளல் பிரசித்தி பெற்றது. நேற்று பகல், 12.45 மணிக்கு ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை கண்டதும் பேட்டை தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து, அம்பலப்புழா பக்தர்கள் யானைகளுடன் பேட்டைத் துள்ளி வந்தனர்.
வாவர் பள்ளிவாசலை வலம் வந்து, பெரிய சாஸ்தா கோவிலில் நிறைவு செய்தனர். பின்னர் அவர்கள் பெருவழிப்பாதை வழியாக சபரிமலை சென்றனர். இதுபோல, ஆலங்காடு பக்தர்கள், பகல் 3 மணிக்கு வானில் பிரகாசித்த நட்சத்திரத்தை கண்டதும் பேட்டை துள்ளினர். இத்துடன் பேட்டை துள்ளல் நிறைவு பெற்றது.
மகர ஜோதி
இதையடுத்து சுவாமி ஐயப்பனின் திருஆபரணம் அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை வலியக்கோயிக்கல் சாஸ்தா கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். அதன் பின்னர் மாலை ஐயப்ப சன்னிதானம் வந்தடையும்.
தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடக்கும். இதையடுத்து மகர விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் தயாராகும். மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சுவாமி ஜயப்பனின் திருநடை அதிகாலை 2.30 மணிக்கு சாத்தப்பட்டு, மீண்டும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். அன்றைய தினம் மாலை மகர ஜோதி தரிசனம் நடக்கும்.
பிரசித்தி பெற்ற வழிபாடு
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி, சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் ஆலயத்தில் மகர விளக்கு பூஜையும், அன்று மாலை நடைபெறும் மகரஜோதி தரிசனமும் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடுகளின் ஒன்றாகும்.
இதையும் படிங்க: 'மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு': பக்தர்கள் சரணகோஷம்!