கேரள மாநிலம், கோழிக்கோடைச் சேர்ந்தவர் அதிரா கீதா ஸ்ரீதரன். துபாயில் பொறியாளராகப் பணியாற்றிவரும் இவர் இந்தியா திரும்புவதற்கு உதவி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'தான் கர்ப்பிணியாக உள்ளதாகவும், தன்னைப் பார்த்துக்கொள்ள, தன் கணவரைத் தவிர இங்கு யாரும் இல்லை. கட்டட நிறுவனத்தில் வேலைசெய்து வரும், தனது கணவருக்கு விடுப்பு கிடைக்காத சூழல் உள்ளது. தனக்கு ஜுலை மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால், தன்னை இந்தியா வருவதற்கு உதவ வேண்டும்' என மனுவில் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு மத்திய அரசிடமிருந்து எந்தவித உதவியும் வரவில்லை என்று கூறியுள்ள அவர், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதை தான் அறிவேன் என்றும், இருந்தபோதிலும் தன்னையும் தனது வயிற்றிலுள்ள குழந்தையையும் பாதுகாக்க, தான் இந்தியா திரும்புவது மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்களைப் போலவே இந்தியா திரும்புவதற்கு துபாயில் அதிக இந்தியர்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சிக்கியிருக்கும் 2,000 பஞ்சாபியர்கள் - மத்திய அரசுக்கு அமரீந்தர் சிங் அழுத்தம்!