மத்தியப் பிரதேசம் மாநிலம் ஷாஹ்தோல் மாவட்டத்தில் நிபானியா கிராமத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் மீது அடையாளம் தெரியாத கும்பல் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து ஆய்வாளர் கான் கூறுகையில், "ஊரடங்கால் நிபானியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் நான்கு காவல்ரகள் பணியில் இருந்தனர். இருசக்கர வாகனங்களில் 6 நபர்கள் கிராமத்தை சுற்றி வந்ததைப் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, பைக்கை நிறுத்தி காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, திடீரென்று அவர்கள் வைத்திருந்த மிளகாய் பொடியை காவலர்கள் மீது தூவிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்” என்றார்.
இச்சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததால் வண்டி எண்ணை கவனிக்க முடியவில்லை. ஆனால், தற்போது காவலர்களை தாக்கிய இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஊரடங்கில் மக்களுக்காக உழைக்கும் காவல் துறையினரை தாக்கும் சம்பவங்கள் அரங்கேறிவருவதால், காவலர்களை தாக்கும் நபர்கள் மீது கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (National Security Act ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வன விலங்குகளை சமைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் கைது