புதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பழகன் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர்களான பாஸ்கரன், கீதா ஆனந்த், டி.பி.ஆர் செல்வம் அதான், அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் இன்று புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா வரவேற்றார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அன்பழகன், "காவல்துறை என்பது அரசு துறைகளில் மிக முக்கியமான துறை. மக்களுடைய பாதுகாப்பு நம்பிக்கை, அமைதி, இவற்றுடன் தொடர்புடைய மிக முக்கியமான பணி காவல்துறையைச் சார்ந்தது.
இத்துறையில் இந்த பணியில் அலட்சியமும், தவறுகளும் சுய விருப்பு வெறுப்புகளும் ஏற்படும்போது மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படுகிறது. பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாட்டை போன்று காவலன் என்ற செயலியை புதுச்சேரியிலும், அதை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.
திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படும்போது, அவர்கள் முகத்தை மூடி காண்பிக்கின்றனர். இதனால் மக்கள் குற்றவாளிகள் யார் என்று பார்த்து அறிந்து முன் ஜாக்கிரதையாக இருக்க முடியவில்லை. எனவே குற்றவாளிகளை கைது செய்யும்போது அவர்கள் முகத்துடன் பத்திரிகையில் புகைப்படம் வெளிவர செய்ய வேண்டும்" என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் எஸ்.பி.கள், காவல்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் நான்கு வழிச்சாலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் - நாராயணசாமி