நாட்டில் நிலவிவரும் சூழலைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்ற வளாகத்தில் திரண்ட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் அரசியல் சாசனத்தை வாசித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாட்டின் மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன், காமினி ஜெய்ஸ்வால், சஞ்சய் பாரிக் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாக்கும் நோக்கில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் திரண்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், அரசியல் சாசனத்தின் முகவுரை (Preamble) சத்தமாக வாசித்து அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சல்மான் குர்ஷித், நாட்டின் நிர்வாகத்திற்கும் நல்லாட்சிக்கும் வழக்கறிஞர்கள் மிக முக்கியமானவர்கள் என்றார். நாட்டின் அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்கள் சரிவர செயல்படாததன் காரணத்தால், அவர்களுக்கு எதிராகவே அரசியல் சாசனத்தின் பாதுகாவலர்களான தாங்கள் போராடும் சூழல் நிலவுவதாக சல்மான் குர்ஷித் வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொதுத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு