கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலம் வெங்காலம்பள்ளி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு லக்ஷ்மி என்ற லங்கூர் வகை குரங்கு ஒன்று தினமும் வந்து பள்ளி மாணவர்களுடன் விளையாடுவது, பாடத்தை கவனிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மதிய உணவு வேளையில் மாணவர்களுடன் தங்கி அவர்கள் வழங்கும் உணவை உண்டு அவர்களின் நண்பனாக திகழ்ந்து வந்தது. பாசத்துடன் பழகி வந்த குரங்கிற்கு மாணவர்கள் லக்ஷ்மி என பெயரும் வைத்தனர். மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாததால் பள்ளி நிர்வாகமும் அந்த குரங்கை துரத்தாமல் பள்ளி வகுப்பறைக்கு அனுமதித்தனர். சொல்லப்போனால், குரங்கின் தினசரி வருகையால் அப்பள்ளிக்கு மாணவர்கள் வருகை தினந்தோறும் 100 சதவீதமாக இருந்துள்ளதாக தலைமை ஆசிரியை தெரிவித்தார்.
இந்நிலையில், செப் 7ஆம் தேதி லக்ஷ்மியை தெருநாய்கள் தாக்கியதில் அது படுகாயமடைந்து உயிரிழந்தது. லக்ஷ்மியை காப்பாற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் முயற்சித்தனர், ஆனால் அதற்குள் லக்ஷ்மி உயிரிழந்துவிட்டது. லக்ஷ்மி இறந்ததால் அன்று அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதை அந்த பள்ளிக்கு அருகிலேயே அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர்.