பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை எதிர்க்கட்சிப் பக்கம் இழுக்க லாலு பிரசாத் யாதவ் குதிரைபேரத்தில் ஈடுபட்டதாக அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறையிலிருக்கும் லாலு பயன்படுத்தியதாக செல்போன் எண்ணை வெளியிட்டு சுஷில் குமார் மோடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஞ்சியில் இருக்கும் லாலு, 8051216302 என்ற எண் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களைத் தொடர்புகொண்டார். அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறியுள்ளார்.
நான் அந்த எண்ணை தொடர்புகொண்டபோது, லாலுவே நேரடியாக போனை எடுத்தார். சிறையிலிருந்து கொண்டு இம்மாதிரியான கேவலமான வேலைகளைச் செய்ய வேண்டாம், அதில் வெற்றிபெற முடியாது என அவரிடம் தெரிவித்தேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
சபாநாயகர் தேர்தலில் பங்கேற்காமல் இருந்தால் அமைச்சர் பதவி வழங்கப்படும் என லாலு ஒரு எம்எல்ஏவிடம் பேசுவது போன்ற ஆடியோ பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. கட்சியில் இருக்கிறோம் என அவர் தயக்கம் காட்டியுள்ளார். கரோனா இருக்கிறது எனச் சொல்லுங்கள் என எம்எல்ஏவிடம் லாலு பேசுவது போன்று ஆடியோ பதிவு அமைந்துள்ளது.
ஊழல் வழக்கில் சிக்கிய லாலு, நான்கு ஆண்டு சிறை தண்டனை காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக, பெரும்பாலான நேரத்தை அவர் மருத்துவமனையில் கழித்துவருகிறார். சமீபத்தில், ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனை இயக்குநருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில் லாலு இருந்ததாகவும் கூறப்படுகிறது.