மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 23) அதிகாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்துள்ளதாக காவல் ஆய்வாளர் பிரதீப் சிங் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
மாவட்ட தலைமையகத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள கெய்தா காவல் நிலைய வரம்பில் அதிகாலை 3.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. உத்தரப் பிரதேசத்தின் எட்டாவாவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் அகமதாபாத்திற்கு சென்றனர்.
அப்போது, பேருந்து சாலையின் வளைவில் திரும்புகையில் ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டது. அதனால் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 26 வயதுடைய இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்துள்ள 36 பேர் ஆங்காங்கே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.