கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு பெய்த பருவமழையால் ஏராளமான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அம்மாநில அரசியல் தலைவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி, மாநிலத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளான ஹுக்கேரி தாலுகா பசத்வாடா பகுதியில் ஆய்வு செய்தார். கிராம மக்கள் வெள்ளத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறினார்கள்.
இதேபோல், ஆய்வு செய்த முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சித்தராமையா, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் எடியூரப்பா நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், நிவாரண முகாம் நாட்களை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுத்து, அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி நம்பிக்கை அளிக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு விஞ்ஞானத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த சுவர் ஓவியம்!