கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதார ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டும், நகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் உணவகம் திறந்து தேநீர், காபி பானம் வழங்க வேண்டும் என்று பெங்களூருவிலுள்ள மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை மாநகராட்சிப் பணியாளர் சங்கத்தின் தலைவர் அம்ரித்ராஜ் தாக்கல்செய்தார். இதனை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அபே ஸ்ரீவாஸ் ஒகா தலைமையில் நீதிபதி சிவசங்கர் அமரன்னவர் ஆகியோர் அடங்கி அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது, “கரோனா தீநுண்மிக்கு எதிரான போரில் ஈடுபடுவோருக்கு மாநில அரசு, 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' வழங்க வேண்டும். நகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் தேநீர், காபி பானம் உணவகத்தை திறக்க முடியாவிட்டால், தன்னார்வலர்களுக்கு காபி பானம், தேநீர் ஆகியவை கிடைக்க மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும்” என மனுதாரர் வாதிட்டார்.
மனுதாரரின் வாதங்களைக் கூர்ந்து கவனித்த நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மாநிலத் தலைமைச் செயலர், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு வருகிற 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட நீதிமன்றம் - ஸ்டாலின் வரவேற்பு