மேற்குவங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் கிருஷ்ணா பாசு (89). இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். இதனிடையே சமீபத்தில் கிருஷ்ணா பாசுவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், நேற்று கிருஷ்ணா பாசு மாரடைப்பால் காலமானதாக அவரது மகன் சுமந்த்ரா போஸ் அறிவித்தார். அவரது மறைவிற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணாமூல் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1930ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணா பாசு, கொல்கத்தா சிட்டி கல்லூரியில் பேராசிரியையாக 40 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் அரசியலில் நுழைந்த அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக 1996ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின் 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அவர் வெற்றிபெற்றார். இவர் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.