கேரள மாநிலம், கூடத்தாயி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், கடந்த 12 ஆண்டுகளில், ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். இதன் பின்னணியை விசாரித்தபோது, முன்னாள் மருமகள் ஒருவரே அனைவருக்கும் சயனைடு கலந்து கொடுத்து, அந்த குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்ததாகத் தெரியவந்தது.
இதையடுத்து, ஜோலி ஜோசப் என்ற 47 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். தன்னை விவாகரத்து செய்ததற்காக, முன்னாள் கணவர் ரிஜூ ஜோசப் குடும்பத்தினரைப் பழிவாங்க இதனைச் செய்ததாக முதலில் கூறப்பட்டு வந்த நிலையில், மேம்பட்ட விசாரணையில் கிடைத்த புதுப்புது தகவல்கள் காவல் துறையினரே திடுக்கிடும் வகையிலிருந்தது. திரைப்பட பாணியில் அமைந்த இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மட்டன் சூப் கொலைக் குற்றவாளிகளை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
இத்தருணத்தில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோலி, அவருக்கு உதவிய மேத்யூ, பிரஜிகுமார் ஆகியோர் பிணை வழங்கும்படி நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இவர்கள் மூவரின் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், வழக்கை விசாரித்த தாமரச்சேரி தலைமை நீதித்துறை நீதிமன்றம், பிணை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இம்மூவரின் காவலை நவம்பர் மாதம் 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த கொடூர கொலை சம்பவம் குறித்த மேம்பட்ட விசாரணையில், புதைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவர வாய்ப்பிருப்பதாகக் காவல் துறையினர் நம்புவதாகக் கூறப்படுகிறது.