திருவனந்தபுரம்: கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக கொடியேறி பாலகிருஷ்ணன் தனது செயலாளர் பதவியை உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா கடிதத்திற்கு மாநிலக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவனுக்கு கட்சி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் கைதான பிறகே, கொடியேறி பாலகிருஷ்ணன் ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டதாகப் பலர் கூறுகின்றனர். தகவல்களின்படி, பாலகிருஷ்ணன் தனது மகன் மீதான வழக்கின் விவரங்கள் குறித்து கட்சியினருக்கு விளக்கியதாகவும், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் கட்சி தலையிடத் தேவையில்லை; தன் மகன் தீர்ப்பை எதிர்கொள்ளட்டும் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், பினீஷ் கொடியேறி, கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் தடுப்பு அமைப்பினரும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்தனர். பினீஷ் கேரளா மற்றும் பெங்களூருவில் நட்சத்திர விடுதிகளை நடத்திவந்ததும், அதற்காக அவரது வங்கிக் கணக்கில் ஏராளமான பணம் செலுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதனால், கேரள அரசியல்வாதிகள் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். எனவே, அரசியல் அழுத்தங்கள் காரணத்தால் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த கொடியேறி பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் எனவும் தகவல் வெளிவருகிறது.