கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் எட்டு சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
குறிப்பாக, அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.
இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ், டி.எம்.சி, தி.மு.க, ம.தி.மு.க, சி.பி.ஐ., சி.பி.ஐ (எம்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உழவர்களுக்கு எதிரான சதி என குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தன.
நாடு முழுவதும் மத்திய அரசின் இந்த சட்ட முன்வடிவுகளை கண்டித்து போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சட்ட முன்வடிவுகளை எதிர்த்து கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை 'ரெயில் ரோகோ' போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர், "நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்களை பெருநிறுவனங்களின் அடிமைகளாக்கவே இந்த சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இந்த சட்ட முன்வடிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் கடும் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்" என எச்சரித்தார்.
தெலங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்த சட்ட முன்வடிவுகளை எதிர்த்து உழவர் போராட்டங்கள் தீவிரமடைந்துவருகிறது.
முன்னதாக, பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.