மகாராஷ்டிரா மாநிலம் காண்டேஷ் பகுதியை பாஜகவின் வலுமிக்க கோட்டையாக மாற்றிக் காட்டியவர் ஏக்நாத் காட்சே. மத்திய அமைச்சராகவும், மகாராஷ்டிரா மாநில அரசின் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் முக்கிய பதவிகளில் பங்காற்றிவந்த அவர் கடந்த சில மாதங்களாக பாஜக மேலிடம் மீது அதிருப்தியில் இருந்துவந்ததாக அறியமுடிகிறது.
இந்நிலையில், கடந்த 42 ஆண்டுகளாக பாஜகவில் அங்கம் வகித்துவந்த அவர் நேற்று (அக்டோபர் 22) அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். பாஜகவிலிருந்து விலகிய அவர், இன்று சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்.சி.பி.யில் இணையவுள்ள அவருக்கு மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைச்சரவையில் ஒரு முக்கியமான பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. வீட்டுவசதி அமைச்சகம் அவர் வசம் ஒப்படைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் காரணமாகவே, மகாராஷ்டிரா அமைச்சரவைக் கூட்டம் இன்னும் ஓரிரு நாள்களில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் காட்சேவுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஒன்றும் வழங்கப்பட உள்ளது. வடக்கு மகாராஷ்டிரா மற்றும் மேற்கு விதர்பாவில் உள்ள 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மகத்தான செல்வாக்கை கொண்டிருக்கும் ஏக்நாத் காட்சேவின் விலகல் பாஜகவுக்கும் பலத்த பின்னடைவையும், என்.சி.பிக்கு பெரும் பலத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல் நிகழ்வு மாநிலத்தில் பல அரசியல் திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என்றும் என அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கப்போவது உறுதி என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து பாஜக மேலிடம் மீது கடும் அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்களான, பிரகாஷ் மேத்தா, சத்ரசேகர் பவன்குலே, வினோத் தவ்தே போன்றவர்களும் காட்சேவின் வழியைப் பின்பற்றலாம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரம் கூறுகிறது.