டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின்கீழ் 2020 ஏப்ரல் 12 தேதியன்று, காணொலி கலந்தாய்வு தீர்வை உருவாக்குவதற்கான கண்டுபிடிப்புச் சவாலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்திருந்தது.
இதில் பங்கேற்க பிரபல தொழில் நிறுவனங்கள், புதிதாக நிறுவனங்கள் ஆரம்பித்தவர்கள், தனிப்பட்ட வல்லுநர்கள் என சுமார் ஆயிரத்து 983 விண்ணப்பங்கள் குவிந்தன. அந்த விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் மூன்று கட்ட செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், புதுமையான தீர்வுகள் யோசனையுடன் வந்த 12 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, யோசனை செயல்திறனாக வடிவமைக்க தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
அவ்வாறு உருவாக்கிய முன்மாதிரிகளை அரசின் மூத்த அலுவலர்கள், புகழ்பெற்ற கல்வியாளர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் அடங்கிய புகழ்பெற்ற நடுவர் மன்றத்தால் மதிப்பீடு செய்யப்பட்டன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு தலா ரூ.20 லட்சமும், பின்னர் இரண்டு குழுவிற்கு ரூ.15 லட்சமும் சோதனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்வதற்காக என்.ஐ.சி. கிளவுட் சார்பில் வழங்கப்பட்டன.
இறுதியில் பைனலுக்குத் தேர்வான ஐந்து போட்டியாளர்களின் தீர்வுகளையும் ஆராய்ந்த ஜூரி, இந்தத் தயாரிப்புகள் ஒவ்வொன்றையும் விரிவாக மதிப்பீடு செய்து வெற்றியாளர்களைத் தீர்மானித்தார்.
இந்நிலையில், காணொலி கலந்தாய்வு தீர்வு கண்டுபிடிப்பு கிராண்ட் சேலஞ்சின் முடிவுகளை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். அதன்படி, டெக்ஜென்சியா மென்பொருள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஆலப்புழாவில் (கேரளா) இயங்கும் Vconsol நிறுவனம் பரிசை தட்டிச்சென்றதாக அறிவிக்கப்பட்டது.
போட்டியின் வெற்றியாளருக்குப் பரிசுத் தொகையாக ஒரு கோடி ரூபாயும், மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஓ & எம் சார்பில் ரூ.10 லட்சம் கூடுதலாக நிதி உதவியும் வழங்கப்படும். இது ஒப்பந்தத்தின் மூலம் அரசால் பயன்படுத்தப்படும். மேலும், ஜூரி மூன்று விண்ணப்பதாரர்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளில் சாத்தியமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, மூன்று மாத காலத்திற்குள் கண்டுபிடிப்பை மேம்படுத்த தலா ரூ.25 லட்சம் ஆதரவு மேம்பாட்டு ஒப்பந்தத்தை வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், "இந்திய தொழில்முனைவோர், புத்தாக்குநர்கள் பிரதமரால் வழங்கப்பட்ட ஆத்மனிர்பர் பாரதத்திற்கான (சுயசார்பு பாரதம்) தெளிவான அழைப்புக்குப் பதிலளித்து உலகத்தரம் வாய்ந்த சில காணொலி கலந்தாய்வுத் தீர்வுகளை நான்கு மாத கால இடைவெளிக்கும் கொண்டுவந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டின் மென்பொருள் தயாரிப்பு, மொபைல் பயன்பாட்டுப் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் வளர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இதுபோன்ற முயற்சிகள் மேலும் மேம்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.