"வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான சோதனைகளை விமான நிலையங்களில் மாநில அரசு தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், அவர்களுக்கான சிகிச்சையை உறுதி செய்யவும், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் விமான நிலையங்களில் நோய் எதிர்ப்பு சக்திக்கான சோதனைகளை நடத்த கணினிமயமாக்கப்பட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஐந்து முதல் பத்து அறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கரோனா பரிசோதனைகளை செய்யாமல் வரும் பயணிகளுக்காக நடத்தப்படுகின்றன. சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் தனிமனித பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து சோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகள், பத்து வயதுக்கும் குறைவான குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பிற உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
இந்த சோதனையில் தொற்று இருப்பது உறுதியானவர்கள் கரோனா சிகிச்சை மையங்களுக்கும், மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் அனுப்பப்படுவார்கள். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அவர்களும் கரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
இந்த நோய் எதிர்ப்பு சக்தி சோதனைகளின் முடிவுகளை நிமிடங்களில் நாம் பெற முடியும். இந்த சோதனை RTPCR சோதனைக்கு சமமானதல்ல. கரோனா நோய் தொற்றை RTPCR சோதனைகள் மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.