கேரளாவின் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக பலகோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கேரளாவில் நான்கு ஆயிரத்து 500 கோடி மதிப்பில் இ-மொபிலிட்டி திட்டத்தின் ஆலோசனையை பன்னாட்டு நிறுவனமான பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (பி.டபிள்யூ.சி)க்கு வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவுகளில் ஊழல் நடைபெற்றுள்ளது.
இது குறித்து எவ்வித டெண்டர்களையும் கோராமல் அரசு ஊழலில் சிக்கியுள்ளது. மேலும், இந்த நிறுவனம் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) இரண்டு ஆண்டு தடையை எதிர்கொண்ட நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளதில் முதலமைச்சருக்கு நேரடி தலையீடு உள்ளது. மேலும் ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் உள்ளது. ஆகவே முதல்கட்டமாக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், “ஒரு கம்யூனிச முதலமைச்சர் முதலாளித்துவத்தைப் பற்றி மோசமான அனைத்தையும் எடுத்துக்காட்டுகின்ற ஒரு நிறுவனம் மீது ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்? என்றும் சென்னிதாலா கேள்வி எழுப்பினார்.