மக்களின் சிந்தனைகளில் சிறந்த மாற்றத்தை உருவாக்கும் பெண்கள், பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள பெண்கள் ஆகியோருக்கு வோக் (Vogue) மாத இதழ் சார்பாக ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வோக் விருது வழங்கும் விழா, காணொலி வாயிலாக நடந்தது. அதில் இந்த ஆண்டின் சிறந்த தலைவருக்கான விருதினை நடிகர் துல்கர் சல்மான் அறிவித்தார்.
அந்த விருது கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அவர் பற்றி நடிகர் துல்கர் கூறுகையில், ஷைலஜா கேரளாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பெருமை என்றார்.
இந்த விருது பற்றி ஷைலஜா கூறுகையில், கரோனா வைரசை எதிர்த்துப் போராடிவரும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
கரோனா பாதிப்பை எப்படி கையாளுவது என்று தெரியாமல் உலகமே விழிபிதுங்கி நின்றபோது, கேரளா அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது. ஐநா சார்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திலும் ஷைலஜா கலந்துகொண்டு பேசினார்.
கேரளாவின் வடக்கு மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவியபோது, ஷைலஜா சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். கேரளாவிலிருந்து நிபா வைரஸ் பரவாமல் தடுத்ததில் ஷைலஜாவின் பங்களிப்பு மிக அதிகம்.
இந்த விருது விழாவில் செவிலி ரேஷ்மா மோகன்தாஸிற்கு வோக் இந்தியாவின் போராளி என்று விருது வழங்கப்பட்டது. அதேபோல் கமலா ராம்மோகன், விமானி ஸ்வாதி ராவல், ரிட்சா ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: முதலமைச்சரின் அரசியல் ஆலோசகர் தற்கொலைக்கு முயலுவது சாதாரண விஷயமல்ல - டி.கே. சிவக்குமார்