2011ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூ.டி.எஃப்.) ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த கே. பாபு (சுங்கவரித் துறை அமைச்சர்), வி.எஸ். சிவக்குமார் (சுகாதாரத் துறை அமைச்சர்), காங்கிரஸ் மூத்தத் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடம் லஞ்சம் கொடுத்து மதுபார் உரிமம் பெற்றேன் என பிஜூ ரமேஷ் என்பவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
கேரள மாநில பார் ஹோட்டல் உரிமையாளர்கள் அமைப்பின் தலைவரான பிஜூ ரமேஷின் இந்தக் குற்றச்சாட்டு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த ஊழல் முறைகேடு வழக்குத் தொடர்பாகப் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஏதுவாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ரமேஷ் சென்னிதலா மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு முடிவெடுத்தது.
எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலா, கேரள சட்டப்பேரவையின் பதவியில் இருப்பதால் இந்த வழக்கை விசாரிக்க ஆளுநரின் அனுமதி தேவை என காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ரமேஷ் சென்னிதலா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கேரள அரசின் கையூட்டு & ஊழல் தடுப்புப் பணியகம் (வி.ஏ.சி.பி.) சார்பில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான், சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோரின் அனுமதி கோரி கோப்புகள் அனுப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், “நான் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை. எனது கைகள் கறைபடியாதவை என்பதால் இந்த வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இந்த விசாரணையைப் பற்றி எனக்குப் பயமில்லை. மகிழ்ச்சியாக விசாரணையை எதிர்கொள்வேன்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், நான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது இந்தக் குற்றச்சாட்டை மறுத்தேன். இந்தச் செயல் அரசியல்ரீதியான பழிவாங்கல். மத்திய அரசின் பல்வேறு விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடியை ஆளும் இடதுசாரி கூட்டணி சந்தித்துவருகிறது. இதனால் எதிர்க்கட்சிகளை ஆளும் அரசு குறிவைக்கிறது” எனத் தெரிவித்தார்.
டிசம்பர் 8ஆம் தேதி கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கோவிட்-19க்கு உயிரிழந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.