கேரள மாநிலம் கொச்சி ஜலந்தர் முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல். இவர் மீது அருட்சகோதரி ஒருவர் 2018ஆம் ஆண்டு பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில், 'ஃபிராங்கோவால் 2014-16ஆம் ஆண்டுகளில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின்பேரில் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் வன்புணர்வு வழக்குப் பதியப்பட்டது. இதையடுத்து ஃபிராங்கோ 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஃபிராங்கோவுக்கு அதே ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நீதிமன்ற பிணை கிடைத்தது. ஃபிராங்கோ மீது காவலர்கள் ஆயிரத்து 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளனர். வழக்கில் மூன்று பேராயர்கள், இதர மதகுருமார்கள் 11 பேர், அருட்சகோதரிகள் உள்ளிட்ட 83 பேர் சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணை நடந்துவருகிறது. சாட்சியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விசாரிக்கப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் ஃபிராங்கோ மீது மற்றொரு அருட்சகோதரி (14ஆவது சாட்சி) பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
அதில், “என்னை மொபைல் காணொலி அழைப்பில் தொடர்புகொள்வார். அப்போது எனது அந்தரங்க உடல் பாகங்களைக் காட்டும்படி வற்புறுத்துவார். யாருமில்லாத நேரம் பார்த்து என்னைத் தொட முயற்சிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஃபிராங்கோ மீது இரண்டு அருட்சகோதரிகளின் புகார்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஃபிராங்கோ மீதான பாலியல் புகார்கள் வெளியானதையடுத்து அவர் டயோசீசன் பேராயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஃபிராங்கோ மீது முதல் முறையாக துணிச்சலுடன் புகார் தெரிவித்த அருட்சகோதரி பல இன்னல்களை அனுபவித்தார். அவருக்கு ஆதரவாக அருட்சகோதரிகள் போராட தொடங்கினர். அதன்பின்னர் ஃபிராங்கோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: இரண்டாண்டு காதல், 12 மணி நேரத்தில் முறிவு