கேரளாவில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள், மாநிலத்தில் உயர் அலுவலர்கள் பலர் சிக்கியுள்ள தங்கக் கடத்தல் வழக்கு குறித்து எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் பினராயி தலைமையிலான அரசாங்கத்திற்கு கிடைத்த பாராட்டுகள் அனைத்தும் இரண்டு கடலோர கிராமங்களில் கரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியதால் மறைந்துவிட்டன.
இதையடுத்து, நாட்டையே உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கை சந்திக்க நேரிட்டது. இந்த வழக்கில் அரசு அலுவர்கள் எட்டு பேர் காவல்துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிப் பதிவுகளும் சிதைந்துவிட்டதாக தலைமைச் செயலர் கூறியுள்ளார். ஆனால், மாநிலத்தில் எங்கு மின்னல் தாக்கியது என்பது யாருக்கும் தெரியவில்லை. இவற்றைக்கொண்டு பார்க்கும்போது, பினராயி விஜயன் தங்கக் கடத்தல் வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை அழிக்க முற்படுவது தெரிகிறது. இதனை தேசிய புலனாய்வு முகமையினர் விசாரிக்கவேண்டும்.
மேலும், கின்ஃப்ரா என்ற நிறுவனத்தின் மூலம் பல்வேறு நியமனங்கள் நடைபெற்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் மிண்ட் என்ற நிறுவனத்திற்கு பல்வேறு பணிகளை ஒதுக்கியுள்ளது தெரிகிறது. தலைமைச் செயலர் மிண்ட் நிறுவனத்தின் கீழ் செய்யப்பட்ட அனைத்து நியமனங்களின் பட்டியலையும் வெளியிடவேண்டும்" என்றார்.