புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலை-முல்லைத்தீவு இடையில் கரையைக் கடந்ததாக, இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புயலானது தற்போது தமிழ்நாட்டின் பாம்பனுக்கு 90 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. புரெவி புயல் காரணமாக, டிசம்பர் 4ஆம் தேதி தென் தமிழ்நாடு மற்றும் தெற்கு கேரள பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 3 முதல் 5 வரை பலத்த மழை, சூறை காற்று இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.
மேலும் கேரளாவிற்கு விரைந்த என்.டி.ஆர்.எஃப் சேர்ந்த எட்டு குழுவினர், மலைப் பிரதேசங்களையும், திருவனந்தபுரத்தின் கரையோரப் பகுதிகளையும் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில இன்று(டிச.3) கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்.டி.எம்.ஏ) மற்றும் பிற துறைகளின் உயர் மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
மேலும், ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில் அதனை சமாளிக்க விமானப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.