கேரளாவில் புதிதாக 28 பேருக்கு கோவிட் - 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டபின், அம்மாநிலம் முடக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
துபாயில் இருந்து கேரளா திரும்பிய 28 நபர்களுக்கு கோவிட் - 19 தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 19 நபர்கள் கேரளாவில் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துவரும் காசரகோட் பகுதியைச் சேர்ந்தவர்கள், கன்னூரில் 5 பேர், பத்னம்திட்டாவை சேர்ந்த ஒருவர், எர்ணாகுளத்தை சேர்ந்த இருவர், திருச்சூரை சேர்ந்தவர் ஒருவர் என முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர், மாநிலம் முழுவதும் 64,000 நபர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 383 நபர்கள் வெவ்வேறு மருத்துமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து கேரளா திரும்பிய 28 நபர்களில், 25 பேருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மார்ச் 31ஆம் தேதி வரை மாநிலத்தை முடக்க முடிவு செய்துள்ளோம். கேரள அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதுவரை இயங்காது என தெரிவித்தார்.
அதேபோல் சண்டிகர் துணை நிலை ஆளுநர் விபி சிங் பட்நோர், சண்டிகரை முடக்குவதாக அறிவித்துள்ளார். யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொண்டார். பஞ்சாப் முடக்கம் அறிவித்த ஒரு மணி நேரத்துக்கு பிறகு அவர் இதை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.