கரோனா பரவல் காரணமாக நாடே வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஒருநாள் மக்கள் ஊரடங்கு, அடுத்த இரு தினங்களில் 21 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டு, தற்போது வருகிற 17ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா ஏற்படுத்திய இந்த சுகாதார நெருக்கடி காரணமாக, நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில்லாத பகுதிகள் பசுமை மண்டலமாகவும், நடுத்தர பாதிப்பு கொண்டவை ஆரஞ்சு மண்டலமாகவும், அதீத பாதிப்பு கொண்ட பகுதிகளுக்கு அபாய நிறமான சிவப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அழுத்தம் காரணமாக மக்கள் வீடுகளில் கிட்டதட்ட ஒரு மாதத்துக்கு மேலாக முடங்கியுள்ளனர். இந்த காலத்தை பயனுள்ளதாக மாற்றியுள்ளார் கேரள மாநிலம் கன்னூர் பரியாரம் பகுதியைச் சேர்ந்த இயந்திரவியல் பொறியியல் (மெக்கானிக்கல் என்ஜினீயரிங்) பட்டதாரி மாணவர் அக்ஷய்.
பூட்டு வீட்டுக்கு தான் மனதுக்கு அல்ல என்று உணர்ந்த அக்ஷய், தென்னை ஓலை, தேங்காய் ஓடுகள் (சிரட்டை), சின்னஞ் சிறிய குச்சிகள் கொண்டு தனது தனித்திறமையால் வீட்டிலிருந்தபடியே ஈபிள் கோபுரம் (டவர்), பிரமிடு உள்ளிட்டவற்றை வடிவமைத்துள்ளார்.
தேங்காய் ஓடுகளை கொண்டு இவர் வடிவமைத்த பிரமிடு உள்ளிட்டவை சிறப்பின் அம்சம். இதுமட்டுமின்றி சிறு வீடு ஒன்றையும் குச்சிகளின் துணை கொண்டு, கட்டி அழகு பார்த்துவிட்டார்.
அக்ஷய், இது தொடர்பான காணொலிக் காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் பலராலும் விரும்பப்பட்டு, கருத்துகள் இடப்பட்டு பகிரப்படுகிறது.
அக்ஷய்க்கு ரத்தீசன், பிரபாவதி என்ற பெற்றோரும், அதிரா என்ற சகோதரியும் உள்ளனர். அதிரா நடனக் கலைஞராக உள்ளார். அக்ஷய் துணி வியாபாரத்திலும் சிறந்து விளங்குகிறார் என்பது மற்றொரு சிறப்பு.
இதையும் படிங்க: திருவனந்தபுரம் ஐபிஎஸ் ஐஸ்வர்யாவுடன் சிறப்பு நேர்க்காணல்!