தெலங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் பொய்யான இந்துக்கள் எனவும், தான்தான் உண்மையான இந்து எனவும் கூறியுள்ளார். பாபர் மசூதி வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும், அரசியல் கட்சிகள் ராமர் பிறந்த இடத்தை நிர்ணயிக்கக் கூடாது எனவும், பாஜக சொல்வதால் இந்துக்கள் கோயிலுக்குச் செல்வதில்லை எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி 65 ஆண்டுகளும், பாஜக 11 ஆண்டுகளும் ஆட்சியில் இருந்தும் கூட விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னையையும், தண்ணீர் பற்றாக்குறையும் தீர்த்து வைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நேரு குடும்ப பெயர்களை அரசு திட்டத்திற்கு வைப்பதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் தீனதயாள் உபாத்யாய, சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோர்களின் பெயர்களை அரசு திட்டத்திற்கு வைப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
அதனால்தான் கூட்டாட்சி முன்னணி ஆட்சிக்கு வர வேண்டும் என தான் விரும்புவதாகவும் கூறினார்.