தேசியவாதத்திற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி காஷ்மீரைச் சேர்ந்த ஊடகவியலாளர் மஸ்ரத் செரா மீது முன்னதாக சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்ட நிலையில் அம்மாநில காவல் துறையினர் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காஷ்மீர் சைபர் காவல் நிலையத்தில் செராவிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை குறித்து பேசிய செரா காவல் துறையினரின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
“விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. நான் கைதுசெய்யப்படவில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக தான் விசாரணைக்குச் செல்லப்படுவது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் செரா ட்வீட் செய்திருந்தார்
ஃபேஸ்புக்கில் வன்முறையைத் தூண்டும்வகையில் பதிவிட்டதாகவும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் புகைப்படங்களைப் பகிர்வதாகவும் செரா மீது உபா சட்டத்தில் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்) முன்னதாக வழக்குப் பதியப்பட்டது.
மக்களின் குரலாக ஒலிக்கும் இவர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் பாய்ந்ததற்கு ஊடகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பினர், பல்வேறு ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், மக்கள் மத்தியிலும் குரல் ஓங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜனநாயகத்தை நசுக்கும் அரசு: காஷ்மீர் ஊடகவியலாளர் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்கு!