கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பென்னி - பெஸ்ஸி. இந்த தம்பதியரின் மகன் ஆல்பின் பென்னி (22), மகள் ஆன் மேரி (16). இவர்களுக்கு சொந்தமாக ஐந்து ஏக்கம் நிலமும், பன்றிப் பண்ணை, கோழிப் பண்ணை ஆகியவை உள்ளன.
ஆல்பின் பென்னி படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லவில்லை. இதனால் குடும்பத்தினர் ஆல்பினை வேலைக்கு போகச்சொல்லி அடிக்கடி திட்டியுள்ளனர். இதனால் கோபமடைந்த ஆல்பின், குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தான் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு திட்டம் தீட்டியுள்ளார்.
ஐஸ்கிரீமில் விஷம்
இந்நிலையில், கடந்த ஜூலை 30ஆம் தேதி தனக்கு ஐஸ்கிரீம் செய்து தருமாறு தனது அம்மாவிடம் ஆல்பின் கேட்டுள்ளார். பின்னர் வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கடைக்குச் சென்று வாங்கி வந்த ஆல்பின், அதில் யாருக்கும் தெரியாமல் எலி மருந்தை ஐஸ்கிரீமில் கலந்துள்ளார். தன் அண்ணனின் சதித்திட்டத்தை அறியாத தங்கை மேரியும், தந்தை பென்னியும் ஐஸ்கிரீமை சாப்பிட்டுள்ளனர். தாய் பெஸ்ஸி தனது தொண்டை சரியில்லாத காரணத்தால் ஐஸ்கிரீம் சாப்பிட மறுத்துள்ளார்.
மீதமிருந்த ஐஸ்கிரீமை வீட்டிலிருந்த நாய்க்கு வைக்குமாறு பெஸ்ஸி, மகன் ஆல்பினிடம் கூறியுள்ளார். ஆனால், ஆல்பினோ அதற்கு மறுத்துள்ளார்.
தங்கை உயிரிழப்பு
இதனைத்தொடர்ந்து மேரி வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி மஞ்சள் காமாலை காரணமாக உயிரிழந்தார். இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக தந்தை பென்னியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடற்கூறாய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
தற்போது மேரியின் உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் எலி மருந்து சாப்பிட்ட தடயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆல்பின் கடைகளில் எலி மருந்து வாங்கியது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் ஆல்பினை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆல்பின் சிக்கியது எப்படி?
ஒரு வாரத்திற்கு முன்னதாக, ஆல்பின் தனது செல்போனில் எலி மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும், எவ்வளவு அளவு பயன்படுத்த வேண்டும், எலி மருந்தின் விஷத்தன்மை எப்படி இருக்கும் என அனைத்தையும் ஆன்லைனில் கற்றுள்ளார். பின்னரே எலி மருந்தை ஐஸ்கிரீமில் கலந்துள்ளார்.
இது அனைத்தும் ஆல்பினின் செல்போன் ப்ரவுசர் ஹிஸ்டரியை பார்த்தபோது காவல் துறையினர் ஆல்பின்தான் கொலை செய்துள்ளார் என்பதை கண்டு பிடித்துள்ளனர்.
சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக குடும்பத்தினர் அனைவரையும் இளைஞர் கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா வார்டில் மது அருந்திய நோயாளி - 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு