கரோனா பரவல் காரணமாக மார்ச் 25ஆம் தேதி மூடிய பள்ளி, கல்லூரிகளின் கதவு எப்போது திறக்கப்படும் என்று தெரியவில்லை. மூன்றாம் கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய, அரசு பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும் என்றே கூறியுள்ளது.
இதுமட்டுமில்லாமல், சென்ற கல்வியாண்டின் இறுதியில் பெரும்பாலான மாநிலங்களில் ஆண்டு இறுதித்தேர்வு ரத்துசெய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற்றதாக அறிவித்தன. கல்லூரி, பல்கலைக்கழங்களுக்கும் இதே நிலைதான். இந்தாண்டு முடியும்வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே கூறப்படுகிறது.
இருப்பினும், மாணவர்களின் படிப்பு வீணாகிவிடக் கூடாது என்பதற்காக இணையவழிக் கல்விக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. ஆனாலும் இதில் ஒரு சிக்கல் உள்ளது. தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியிருப்பதால், பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே அல்லல்படுகின்றனர். விஷயம் இப்படியிருக்கையில், இணையவழிக் கல்வியை அவர்களின் பிள்ளைகள் எப்படி பெறுவார்கள்?
இதுமட்டுமா, கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்க அரசுகள் முன்வந்துள்ள நிலையில், பெரும்பாலான மக்களின் வீடுகளில் தொலைக்காட்சி கூட இல்லை என்பதே நிதர்சனம். இப்படி எந்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், ஏழை மாணவர்கள் எப்படி அவர்களுக்கான கல்வியைப் பெறுவார்கள்?
யாருடைய தயவையும் எதிர்பாராமல் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, பெற்றோர் சிலர் கடன் வாங்கியோ, நகைகளை அடமானம் வைத்தோ எப்படியோ காசை புரட்டி தொலைக்காட்சி வாங்குகிறார்கள். அதில் ஒருவர்தான் கர்நாடகா மாநிலம் காடக் மாவட்டத்தைச் சேர்ந்த சாவித்ரி.
நாரகுண்டா தாலுக்காவிலுள்ள ராடர் நாகனூரில் வசிப்பவர் கூலித் தொழிலாளி சாவித்ரி. அவருக்கு 7ஆம் வகுப்பு படிக்கும் சுரேகா என்ற மகளும், 8ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக் என்ற மகனும் உள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பிள்ளைகள் இருவரும் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், கர்நாடகா அரசு தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவிருப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு சாவித்ரிக்கு சந்தோஷத்தை அளித்தாலும், வீட்டில் தொலைக்காட்சி இல்லாமல் பிள்ளைகள் எப்படி படிப்பார்கள் என்ற கேள்வி அவரைத் துளைத்தெடுத்தது.
யாரிடமாவது கடன் வாங்கி தொலைக்காட்சி வாங்கிவிடலாம் என்று எண்ணிய அவருக்கு மிஞ்சியது என்னமோ ஏமாற்றமே. ஆம், யாரும் கடன் அளிக்க முன்வரவில்லை. அப்போது அவர் முடிவெடுத்தார் தன்னுடைய தாலி சங்கிலியை விற்று, தொலைக்காட்சி வாங்கலாம் என்று. அதன்படி, தாலியை விற்று கிடைத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொண்டு தொலைக்காட்சி வாங்கினார் சாவித்ரி. தற்போது அந்தத் தொலைக்காட்சியில் அவரது பிள்ளைகள் ஆர்வத்துடன் கல்வி கற்றுவருகின்றனர். பிள்ளைகள் படிப்பதைப் பார்த்து பூரிப்படையும் சாவித்ரிக்கு தாலியை விற்ற கவலை ஒரு பொருட்டல்லவை!