கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணூர் கிராமத்தில் உமேஷ் ஹடகலி என்பர் வசித்து வந்துள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுநரான உமேஷ் ஹடகலி, மே 27ஆம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டார். இறுதிச் சடங்கு செய்யப் போதிய பணம் இல்லாமல், உமேஷின் மனைவி தவித்து வந்துள்ள நிலையில், இந்த குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகமோ அல்லது சுகாதாரத் துறையோ நிதி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதிகாரிகளிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காததால், இறந்தவரின் மனைவி நிதி நெருக்கடியை எதிர்கொண்டு, தனது கணவரின் இறுதிச் சடங்கை செய்ய தனது மாங்கல்ய சங்கிலியை, அதாவது தாலியை விற்கப்போவதாகக் கூறியுள்ளார்.
பின்பு தனது தாலியை விற்று, கணவனுக்கு செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் செய்துள்ளார், அந்தப் பெண்மணி. உமேஷ் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, உமேஷின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு இறந்தவரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் உமேஷ் பணிபுரிந்த கண்ணூர் மருத்துவமனை நிர்வாகம், இவருக்கு எந்த ஒரு உதவியும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சுகாதாரத்துறை அறிவித்த தகவல்படி, கர்நாடகாவில் கோவிட்-19 வழக்குகள் 1,952 ஆக உள்ளது.
இதையும் படிங்க : 16 துணை மின் நிலையங்களை திறந்துவைத்த முதலமைச்சர்