கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்திலிருந்து 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மரிஹால் கிராமம். பல ஆண்டுகளாக அரசின் நலத்திட்டப் பணிகள் எதுவும் செய்யப்படாத இந்தக் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் மட்டுமே இருக்கும் நிலையில், தங்களது வயல்களுக்கு செல்வதற்காக அரசிடன் சாலை வசதி வேண்டி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் அரசோ, 'செவிடன் சாதில் ஊதிய சங்காய்' காலம் கடத்திவந்துள்ளது. அரசாங்கங்கள் மாறினாலும் இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவே இல்லை. இதற்கு முடிவு கட்டும் வகையில், கிராமத்தினர் சார்பாக முடிவு ஒன்று எடுக்கப்பட்டது.
அதன்படி, கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் சார்பாகவும் ரூ.3 ஆயிரம் கொடுத்து சொந்த செலவில் சாலை வசதி அமைத்துக்கொள்வதுதான். ஆனால் கரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் சாலை அமைப்பதற்கான பொருள்கள் கிடைப்பதில் பல சிரமங்கள் உள்ளன. ஆனாலும் உள்ளூரில் கிடைத்த பொருள்களை வைத்து சாலை போடும் பணிக்கான திட்டத்தை கிராமத் தலைவர்கள் குழுவினர் திட்டமிட்டனர்.
ஒரு நாளில் கிராமத்திலிருந்து 20 பேர் சாலை அமைக்கும் பணியில் வேலைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் 20 பேர் கிராமத்திலிருந்து மண் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட, இரண்டரை கிமீ தூரம் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசிடம் இவர்களின் கோரிக்கை என்னவென்றால், மண் சாலையை வேகமாக கான்கிரீட் சாலையாக மாற்றுவதுதான். இல்லையென்றால் கிராமத்தினரின் அனைத்து முயற்சிகளும் வீணாகும். இவர்களின் சாலை அமைக்கும் கோரிக்கைக்கு இப்போதாவது அரசு செவி சாய்க்குமா என்பதே அக்கிராமத்தினர் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: மதுபானங்கள் வரலாறு காணாத விலை உயர்வு : நெருக்கடியில் ஆந்திர மது பிரியர்கள்