07:30
225 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி தொடர 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
07:28
அரசுக்கு எதிராக வாக்களிக்க நினைப்பவர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
07:27
அரசுக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
07:24
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
06:54
முதலமைச்சரின் உரை நீண்டு கொண்டு சென்றதால் 6 மணிக்குள் நடத்தப்பட வேண்டிய நம்பிக்கை வாக்கெடுப்பு காலதாமதம் ஆகியுள்ளது.
06:42
முதலமைச்சர் குமாரசாமி: பதவி நிரந்தரமான ஒன்று இல்லை. வாக்கெடுப்புக்கு தயாராக உள்ளேன். பயந்து ஓடிவிட மாட்டேன்.
06:34
சபாநாயகர் ரமேஷ் குமார்: அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த ராஜினாமா கடிதம் முறையாக இல்லை. விதி 202இன் படி ராஜினாமா கடிதம் அளிக்கப்படவில்லை. ராஜினாமா கடிதத்தை ஒழுங்காக கொடுக்காத உறுப்பினர்கள் என் மீது குறை கூறுகின்றனர். நான் என் ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்துள்ளேன்.
06:14
முதலமைச்சர் குமாரசாமி தன் உரையை முடித்துக் கொண்டார்.
06:10
முதலமைச்சர் குமாரசாமி: 2018-19 நிதியாண்டு பட்ஜெட்டை காட்டிலும் இந்தாண்டு பட்ஜெட் ரூ.9000 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடனை ரத்து செய்ய ரூ. 25,000 கோடி ஒதுக்கியுள்ளேன். நான் மக்களிடம் பொய் சொல்ல மாட்டேன். என்னால் ஒரு விவசாயி கூட ஏமாற்றப்படவில்லை.
06:05
முதலமைச்சர் குமாரசாமி: எனக்கு உதவியாக இருந்த நிதித்துறை செயலாளர், முதன்மை செயலாளர் ஆகிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆட்சி அமைத்த முதல் நாளிலிருந்து இதனை நிலையற்ற அரசு என விமர்சக்கிறார்கள். ஆனால் இந்த சூழ்நிலையிலும், என் அலுவலர்கள் இரவு பகல் பார்க்காமல் உழைத்தார்கள். இது என்னுடைய சாதனை அல்ல, அவர்களின் சாதனை.
05:57
முதலமைச்சர் குமாரசாமி: நான் நட்சித்திர விடுதியில் அமர்ந்து கொண்டு மக்கள் பணத்தை வீணடிப்பதாக சமூக வலைதளத்தில் சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், நான் அரசை காப்பாற்ற முயற்சித்து கொண்டிருக்கிறேன். அரசை காப்பாற்ற முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். என் மேல் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதை எண்ணி மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். நான் மனதளவில் காயப்பட்டுள்ளேன். முதலமைச்சர் பதவியை மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுக்கிறேன்.
05:43
காவல் ஆய்வாளர் அலோக் குமார் பெங்களூரு முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். நகரத்தில் உள்ள மதுபான கடைகள், உணவு விடுதிகள் அனைத்தும் அடுத்த இரண்டு நாட்களுக்கு செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
05:39
சட்டப்பேரவையை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 30 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
05:35
சட்டப்பேரவைக்கு வராத உறுப்பினர்கள் 17 பேரில், 15 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மும்பையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மற்ற இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
04:28
- பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா சட்டப்பேரவையில் பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்து முதலமைச்சர் குமாரசாமி பேச உள்ளார்.
04:24
- அதிருப்தி உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு விதக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, சட்டப்பேரவை பாஜக தலைவர் எடியூரப்பா ஆகியோருக்கு இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
03:43
- பாஜக உறுபினர்கள்: மக்களின் வரிப்பணத்தை முதலமைச்சர் குமாரசாமி வீணடிக்கிறார்.
02:28
- காங்கிரஸ் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவகுமார்: எம்.டி.பி. நாகராஜுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவி கிடைப்பதற்கு நான்தான் காரணம். அதற்காக நான் என்ன அவரை பூட்டியா வைத்திருக்கிறேன். அவர்களை இங்கு அழைத்து வாருங்கள். எங்கள் ஆட்சிக்கு எதிராக அவர்கள் வாக்களிக்கட்டும். என் கட்சிக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறைக்குச் செல்லக்கூட நான் தயாராக உள்ளேன்.
02:17
- காங்கிரஸ் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவகுமார்: என்னை முதுகில் குத்தியது பாஜக அல்ல, மும்பையில் இருக்கும் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள். இதில் கவலை கொள்ள ஒன்றும் இல்லை. அவர்களால் அமைச்சர்கள் ஆக முடியாது. பாஜக தலைவர்கள் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.
02:11
- அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் முகுல் ரோத்தகி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றும். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாமல் இருப்பதும் அவர்களது உரிமை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கொறடா உத்தரவின் மூலம் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.
01:47
அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் வழக்கறிஞர்களை, சபாநாயகர் ரமேஷ் குமார் சந்தித்து பேசி வருகிறார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் சபாநாயகரைச் சந்தித்து பேசி வருகின்றனர்.
01:26
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள்: காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும்.
12.15
கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என நம்புவதாக உச்ச நீதிமன்றம் கருத்து
12.00
கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார், முதலமைச்சர் குமாரசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடையும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன செய்யலாம் எனவும் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
11.45
கர்நாடக சட்டப்பேரவை தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது.
11:15
முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவருமான சித்தராமய்யா கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். முதலமைச்சர் குமாரசாமி அவைக்கு இன்னும் வரவில்லை.
11:00
சம்பந்தம் இல்லாத விவகாரங்களை கையிலெடுத்து கூட்டணித்தலைவர்கள் அவையை இழுத்தடிக்கின்றனர் என பாஜக எம்எல்ஏ மதுசுவாமி குற்றச்சாட்டு.
10:45
சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் சவுதாவுக்குப் புறப்பட்டார் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி. தனது தந்தையான முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடம் ஆலோசனை மேற்கொண்டபின் சட்டப்பேரவைக்குப் புறப்பட்டார் முதலமைச்சர்.
10:35
முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா இன்னும் வீட்டிலிருந்து புறப்படவில்லை எனத் தகவல். காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி உறுப்பினர்கள் ஒரு சிலரே அவையில் தற்போது உள்ளனர்.
10:25
மாலை 4 மணிக்குள் உறுப்பினர்கள் விவாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும், மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு என சபாநாயகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி உறுப்பினர்கள் அவைக்கு இன்னும் வரவில்லை.
10:15
கர்நாடக சட்டப்பேரவை தற்போது தொடங்கியது. சட்டப்பேரவைக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் வருகை. பாஜக உறுப்பினர்கள் விவாதத்தை தொடங்கினர்.